கடலைப் பிளந்த கைத்தடி! (ஆஷுரா தினக்கவிதை)

ஆஷுரா!
அன்று இந்நாளில்
அழித்தொழிக்கப்பட்ட ஆணவம்
அறிவித்தபடியிருக்கிறது என்றும்
வல்லோனின் வல்லமையை!
சடலமான பொய்யின்
சாட்சியில் பொய்யில்லை
உண்மையின் உயர்வினை
உரத்து உரைக்கிறது
கால வெளியில்
காதிருப்போர் கேட்கக் கடவர்.

“உயிருடனும் உணர்வுடனும்
உண்மைக்கு மாறாய் வாழ்வோர்
சவமான பின்பு சாட்சியாகக் கூடும்
சரித்திரத்தின் அகழ்வில்!”

கடலைப் பிளந்த
கைத்தடியின் கூற்று
காதுகளில் ஒலித்தபடி…
“கடலினும் பெரிது கருணை
காருண்யனை நம்பினால்
கைவிடப்படமாட்டோம்”

கடலளவே உகுத்தாலும்
காலம் கடந்த கண்ணீர்
கழுவுவதில்லை கறைகளை
மறுக்கப்பட்ட மன்னிப்பு
மனிதருக்குப் பாடமாகிறது!

 
கவிதை: சகோதரர் பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)

Leave a comment