அவளொரு முஸ்லிம் பெண்

Image

அவளொரு முஸ்லிம் பெண்

உடை உடுத்தும் மனித பண்பாட்டில் சர்ச்சை மற்றும் விவாதப் பொருளாகிப் போய் நிற்பவள் முஸலிம் பெண் மட்டும் தான். உடுப்பில் வேறு எந்த சமுதாயமும் இந்த அளவு சர்ச்சையில் மாட்டிக் கொண்டிருப்பதாக நமக்குத் தெரியவில்லை.

நிறைவாகவோ எத்துனை குறைவாகவோ உடுத்திக் கொண்டு வீதி தோரும் அலைந்தாலும் முஸ்லிம் சமுதாயம் உட்பட எந்த ஆணும் இந்த சர்ச்சையில் சிக்குவதில்லை. அப்படியானால் முஸ்லிம் பெண் மட்டும் இதில் ஏன் முதல் பொருளாகிப் போனாள்? என்பதை நாம் சிந்தித்துதான் ஆக வேண்டும்.

மதம் என்ற நம்பிக்கையுடனும், சமூகம் என்ற அந்தஸ்துடனும் இயங்கும் மனிதவாழ்க்கையை நாம் எடுத்துக் கொள்வோமேயானால் இஸ்லாத்தை விடுத்து பிற மத சமூக பண்பாட்டில் “அனைத்திலும் நீ இப்படித்தான் நடந்துக் கொள்ள வேண்டும்” என்ற ஒரு அறிவுரை முன் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.

மனிதனின் தனி வாழ்வு – பொதுவாழ்விலிருந்து கடவுள் நம்பிக்கை பிரித்தெடுக்கப்பட்டு, அவனது வாழ்க்கை முறையை வேறுபட்ட இரு பிம்பங்களாக்கி வைத்துள்ளது. ‘கோயிலில் போய் கும்பிடு அதை கடந்து வந்தப் பிறகு நீ கோபுரத்தில் வாழ்ந்தாலும் சரி, குடிசையில் வாழ்ந்தாலும் சரி அங்கு கோயிலை – கும்பிடும் இறைவனைப் பற்றி நினைக்கத் தேவையில்லை’ என்ற நிலையே நீடிக்கிறது.

சில – பல சிந்தனையாளர்களால் ‘உன் தனிவாழ்விலோ – பொதுவாழ்விலோ இறைவன் தலையிடக் கூடாது” என்ற போதனையும் முன் வைக்கப்படுகிறது. (மசூதியிலும் – கோயிலிலும் மட்டும் குடும்பம் நடத்தும் இறை நம்பிக்கை மனித வாழ்விற்கு தேவைதானா… என்ற சர்ச்சைக்குள் நாம் நுழையவில்லை)

ஆனால் முஸ்லிம் ஆண் – பெண் இவர்களின் நம்பிக்கை “இறைவன் தன் வாழ்வின் அனைத்துத் துறைக்கும் வழிகாட்டியுள்ளான்” என்பதாகும். (இந்த நம்பிக்கை சரியா.. தவறா.. என்பதை நாம் தனியாக விவாதித்துக் கொள்ளலாம்). இந்த நம்பிக்கைத்தான் முஸ்லிம் பெண்களை மற்றப் பெண்களை விட சற்று அதிகமாக உடை உடுத்தத் தூண்டுகிறது. இது அவள் விரும்பி ஏற்றுக் கொண்ட நம்பிக்கை அடிப்படையில் அமைந்த உடையாகும்.

திணிக்கப்படுகிறதா…?

முஸ்லிம் பெண்கள் விரும்பாத நிலையில் அவர்கள் மீது இந்த உடை திணிக்கப்பட்டு விட்டது போன்ற ஒரு தோற்றத்தை சில எழுத்தாளர்கள் அவ்வப்போது முன் வைக்கிறார்கள். விரும்பி ஏற்காத நிலையில் திணிக்கப்படும் எதுவும் நீண்ட காலத்திற்கு நிலைப் பெற்று நிற்காது என்பது மெத்த படித்தவர்களுக்கு விளங்காமல் போய்விட்டதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஏனெனில் ‘நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் ” என்ற கூட்டத்தில் நிற்பவர்களாகவே இவர்கள் விளங்குகிறார்கள்.

உண்மையில் மத நம்பிக்கை என்ற பெயரில் பெண் விரும்பாத நிலையில் அவள் மீது இத்தகைய உடை திணிக்கப்பட்டிருந்தால் அதற்கெதிராக உலகலாவிய போராட்டம் என்றைக்கோ வெடித்திருக்கும். வெடித்தக் காலங்களிலேயே இந்த திணிப்பு காலாவதியாகிபோயிருக்கும். மத நம்பிக்கை என்ற துவக்கத்திலிருந்து பல நூற்றாண்டுகள் கடந்தப் பிறகும் அந்த மேலதிக உடை புழக்கத்திலிருக்கிறது என்றால் இதை திணிப்பு என்றுக் கூறுபவர்கள் தூர நோக்கு அற்றவர்கள் என்பதே பளிச்சிடுகிறது.

எந்தத் திணிப்பாவது நீண்டகாலம் வாழ்ந்த – வாழ்கின்ற வரலாற்றை எடுத்துக் காட்டுங்களேன் பார்ப்போம்.

வழக்குகள் ஏதும் உண்டா…?

பெண்களுக்கு எதிராக நடக்கும் அனேக கொடுமைகள் வழக்குகளாக்கப்பட்டு பின்னர் வரலாற்று நிகழ்வுகளின் கசங்கல்களாக அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்றைக்கும் பதிவு செய்யப்படுகின்றன. “மேலதிக உடை எங்களுக்கு சுமையானவை – அடிமைத்தனமானவை” என்று முறையிடப்பட்ட, எதிர்க்கப்பட்ட வழக்குகளும் – சம்பவங்களும் உலகில் எத்துனை என்பதை யாராவது எடுத்துக் காட்ட முடியுமா… “

முக்காடுகளுடன் பள்ளிக்கு வரக்கூடாது” என்று சில நாடுகளில் பள்ளியின் நிர்வாகம் கட்டளையிட்டபோது ‘எங்கள் தலை முந்தானைகளால் உங்கள் பள்ளிக் கூடத்திற்கு எத்தகையக் கெடுதியும் வரைப்போவதில்லை. அதே சமயம் நீங்கள் எங்கள் முக்காடுகளை கழற்றுவதன் மூலம் எங்கள் மனங்களைப்புண்படுத்துகிறீர்கள்” என்ற எதிர்வாதம் மாணவிகளால் முன்வைக்கப்பட்ட சம்பவங்களையும் – நிர்வாகம் முக்காடை கழற்றுவதில் குறியாக நின்றபோது மாணவிகள் நீதி மன்றத்தை அணுகுகிறார்கள் என்ற சம்பவத்தையும் தான் உலகம் கண்டு வருகிறது.

இஸ்லாமிய நீதி மன்றங்கள் – இந்திய நீதி மன்றங்கள் – உள்ளுர் ஜமஅத்துகள் இங்கெல்லாம் ஜீவனாம்சம் உட்பட தலாக், சொத்து போன்ற வழக்குகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. அவை கனிசமான அளவைப் பெற்றுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. இதே இடங்களில் முஸ்லிம் பெண்கள் தங்கள் உடைகளுக்கு எதிராக தொடுத்த வழக்குகள் எத்துனை?

தீர்மாணிக்க வேண்டியது பெண்களா..?

பெண்கள் எவ்வாறு உடை அணிய வேண்டும் என்று ஆண்கள் பேசக்கூடாதாம். பெண்கள் தான் பேச வேண்டுமாம். அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டுமாம். கருத்து முன் வைக்கப்பட்டு அது ஆமோதிக்கவும் பட்டுள்ளது.முஸ்லிம் பெண்கள் பேச துவங்கி “புர்காவே புண்ணியம்” ‘புர்காவே கண்ணியம்” என்று ஓட்டுப்போட்டு விட்டால் பெண்ணினம் அனைத்தும் அதை ஒப்புக் கொண்டு அதை அணிய துவங்கி விடுமா…? முஸ்லிம் பெண்கள்தான் பேச வேண்டும் என்ற கருத்து ஏன் வைக்கப்படுகிறது? அவள் புர்கா என்பது அடிமைத்தனம் என்று கூறிவிடுவாள் அந்த கருத்தை வைத்தே புர்காவைக கழற்றி பெண்ணினத்திற்கு விடுதலை வாங்கி கொடுத்து விடலாம் என்ற எண்ணத்திலா..

அவளாக விரும்பி அணியும் உடைப் பற்றி அவளே விமர்சிக்க வேண்டும் என்று கூறுவது எந்த வகை மனநிலையைக் காட்டுகிறது என்பது உலகிற்கு புரியாமல் இல்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s