வீணடித்து விடாதீர்கள் உங்கள் பொக்கிஷத்தை!

வீணடித்து விடாதீர்கள் உங்கள் பொக்கிஷத்தை!

காலாகாலமாகவோ அல்லது தலைமுறை தலைமுறையாகவோ ஒரு தவறை முஸ்லிம் கணவன்மார்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அது – உயர்ந்தோன் அல்லாஹ் – பெண்களுக்கு அளித்திருக்கும் கண்ணியத்தையும், உரிமைகளையும் அவர்களுக்குத் தர மறுப்பது தான்!

ஏனோ தெரியவில்லை. முஸ்லிம் கணவன்மார்கள் தங்களின் மனைவியர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை!

தங்களின் உரிமைகளைப் பெறுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கணவன்மார்கள், தங்களின் மனைவியரின் உரிமைகளைக் காற்றில் பறக்க விட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

திருமணம் முடித்து கணவன் வீட்டுக்கு வந்த பிறகு கணவன் மனைவியிடம் என்ன எதிர்பார்க்கின்றான் தெரியுமா? தன் மனைவி தனது தாய்க்கும், சகோதரிகளுக்கும் (அதாவது அவளது மாமியாருக்கும், நாத்தனார்களுக்கும்) அடங்கிய பெட்டிப் பாம்பாக இருந்திட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கின்றார்.

இளம் மனைவி ஒருவர் சொல்கிறார்:

“நான் சொல்வதை என் கணவன் கேட்பதில்லை. அவரின் அக்காள், தங்கை, குடும்பத்தார் பேச்சை மட்டுமே கேட்கிறார். என்னுடைய பெற்றோரிடம் பேசுவதை வெறுக்கிறார். பெற்றோர் வேண்டுமா, கணவன் வேண்டுமா நீயே தீர்மானித்துக்கொள் என்று என் கணவன் கூறுகிறார். யாரைத் தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் நான் இருந்து வருகிறேன்.”

கணவனும் மனைவியும் இப்படித்தான் வாழ்ந்திட வேண்டும் என்று அல்லாஹ் கற்றுத் தந்திருக்கின்றானா?

இவ்வாறு குழப்பத்தில் இருக்கின்ற மனைவியிடம் கணவன் நடத்தும் இல்லறம் இனிக்குமா?

ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்……… (4:34).

ஆனால் இந்தத் திருமறை வசனத்தை, புரிந்து கொள்ள வேண்டிய விதத்தில் புரிந்து கொள்ளாமல் நமது கணவன்மார்கள் காலா காலமாக தமது மனைவிமார்களுக்கு அநீதி இழைத்து வந்திருக்கிறார்கள். இந்த அநீதி இன்றும் தொடர்கிறது! அதுவும் மார்க்கத்தைப் பின்பற்றுகிறோம் என்ற பெயரிலேயே!?

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுவது என்ன?

ஆண்களே பெண்களை நிர்வகிப்போர் ஆவர். அவர்களில் சிலரை விட வேறு சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி இருப்பதும், ஆண்கள் தங்கள் செல்வங்களை பெண்களுக்காகச் செலவு செய்வதுமே இதற்குக் காரணம். (4: 34)

முஹம்மத் அஸத் என்ற அமெரிக்க இஸ்லாமிய அறிஞர் இவ்வசனத்தின் இப்பகுதிக்கு இவ்வாறு மொழி பெயர்த்துள்ளார்கள்:

“MEN SHALL take full care of women with the bounties which God has bestowed more abundantly on the former than on the latter, and with what they may spend out of their possessions.

இதன் கருத்து என்னவெனில் அல்லாஹ் பெண்களை விட ஆண்களுக்கு எந்தெந்த விஷயங்களில் மேன்மையைத் தந்துள்ளானோ அவைகளைக் கொண்டு பெண்களை ஆண்கள் முழுமையாகப் பாதுகாத்திட வேண்டும்;

அது போலவே ஆண்கள் தங்கள் செல்வங்களை பெண்களுக்காகச் செலவு செய்வதைக் கொண்டும் பெண்களை முழுமையாகப் பாதுகாப்பவர்களாக விளங்கிட வேண்டும்; இவற்றைத்தான் வல்லோன் அல்லாஹ் ஆண்களிடம் எதிர்பார்க்கின்றான்.

இவ்வசனத்தில் – “ஆண்களே பெண்களை நிர்வகிப்போர் ஆவர். ” – என்ற சொற்றொடருக்கான அரபிச் சொற்றொடர் – “அர்ரிஜாலு கவ்வாமூன ‘அலன்-னிஸா
“.
இதில் உள்ள கவ்வாமூன என்ற அரபிச்சொல்லுக்கு என்ன பொருள்?

The expression qawwam is an intensive form of qa’im (“one who is responsible for” or “takes care of” a thing or a person).

அதாவது – கவ்வாமூன என்பதற்கு “பொறுப்பேற்றிட வேண்டிய ஒருவர்” என்றும் ஒன்றை அல்லது ஒருவரைப் பாதுகாப்பவர் என்றும் பொருள் படும்.

பொறுப்பேற்றுக் கொள்ளும் ஒருவரையே நாம் தலைவர் என்கிறோம். இவ்வாறு பெண்கள் விஷயத்தில்; அவர்களைப் பாதுகாத்திடும் பொறுப்பேற்றுக் கொண்ட ஆண்கள் தாங்களே குடும்பத்தின் தலைவர்கள் என்று மட்டும் எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் அது ஒரு மகத்தான பொறுப்பு என்பதனை வசதியாக மறந்து விடுகிறார்கள்!!

சரி, அவ்வாறே எண்ணிக் கொள்ளட்டும்! தலைவன் என்பதால் தன்னை ஒரு “சர்வ அதிகாரி” என்று அவர் நினைத்துக் கொண்டால் அந்தக் குடும்பம் எப்படி இருக்கும்? அங்கே மனைவியின் கண்ணியம் என்னவாகும்? மனைவியின் கருத்துக்களுக்கு அங்கே என்ன மதிப்பு இருக்கும்?

ஒரு நபி மொழியை இங்கே நினைவூட்டுவது பொறுத்தமாக இருக்கும்.

“உங்களில் தலைவன் என்பவன் மக்களுக்கு சேவை செய்பவனே!” – இது அண்ணலார் வாக்கு அல்லவா?

அண்ணலார் அவர்கள் தமது குடும்பத்தாரிடம் வந்து விட்டால், ஒரு சர்வாதிகாரியைப் போலவா தங்கள் மனைவியரிடம் நடந்து கொண்டார்கள்?

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பற்றி அவரது குடும்பத்தார் சொல்வது என்ன தெரியுமா? உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மிக உறுதியான மனிதர் தான்; ஆனால் அவர் எங்களிடம் வந்து விட்டால், அவர் ஒரு குழந்தையைப் போலவே நடந்து கொள்வார்!

கணவன்மார்களே! உடனே வீட்டுக்குச் செல்லுங்கள்! அண்ணலாரின் முன்மாதிரியைச் செயல்படுத்திப் பாருங்கள். சிரித்த முகத்துடன் மனைவியைச் சந்தியுங்கள். போகும்போது உங்கள் மனைவிக்குப் பிடித்த ஏதாவது ஒரு பொருளை பரிசாக வாங்கிச் செல்லுங்கள்.

ஆண்கள் உயர்ந்தவர்களா?

ஒரு கணவன்-மனைவி. திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் தான் ஆகின்றன. ஆனாலும் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்திடவில்லை.

மனைவி சொல்கிறாள்: என் கணவன் என்னிடத்தில் ஒரு “அதிகாரியைப் போல் நடந்து கொள்கிறார்; என்னை அவமானப்படுத்துகிறார். என்னை மதிப்பதே இல்லை. கேட்டால் தான் ஒரு ஆண் மகன் என்றும் ஆண்களுக்கே இஸ்லாம் உயர்வைத் தந்துள்ளது என்றும் அதற்கேற்பவே தான் நடந்து கொள்வதாகவும் சொல்கிறார்.”

முஸ்லிம் கணவன்மார்களில் பெரும்பாலோரும் இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்:

“நாம் தான் குடும்பத்தின் தலைவர்கள். நாம் சொல்வதைத் தான் மனைவி கேட்க வேண்டும். ஏன், எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்டிட அவர்களுக்கு அனுமதி இல்லை. மார்க்கமும் இவ்வாறு தான் கணவன்மார்களுக்கு இந்த உயர்வையும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.”

ஆனால் – இது மிகவும் தவறான ஒரு கண்ணோட்டம்!

பெண்களை விட ஆண்களே உயர்ந்தவர்கள் என்றால், ஆண்களுக்கே எல்லா உரிமைகளும் சலுகைகளும் என்றால், குடும்பத்தில் எல்லா விஷயங்களிலும் எதேச்சையாக முடிவெடுப்பவர்கள் ஆண்கள் தாம் என்றால், அவர்கள் தாங்கள் வைத்ததே சட்டம் என்று கருதிக் கொண்டால், கணவனும் மனைவியும் எவ்வாறு “உற்ற நண்பர்களாக” விளங்க முடியும்? உற்ற துணைவர்களாக விளங்கிட முடியும்?

முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; (9:71)

இவ்வசனம் முஃமினான கணவன்-மனைவி இருவருக்கும் பொருந்தும் தானே?

“அவர்களுடன் மிக நெருங்கிய உற்ற நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்”(4:19)

கணவனும் மனைவியும் நெருங்கிய நண்பர்களே எனும்போது ஆண்கள் தங்களை உயர்ந்தவர்களாக எப்படிக் காட்டிக்கொள்ள முடியும்?

“அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; (2: 187)

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடையாக விளங்கிட வேண்டும் எனும்போது – இருவருக்கும் இங்கே சம அந்தஸ்தினை உயர்ந்தோன் அல்லாஹ் வழங்கிடவில்லையா?

கணவனுக்கு மனைவி கண்குளிர்ச்சி என்பது போலவே மனைவிக்கும் கணவன் கண்குளிர்ச்சியாக விளங்கிட வேண்டும் என்று இருவருக்கும் இறைவன் துஆ கற்றுத்தந்திடவில்லையா?

பின்னர் எப்படி ஆண்கள் தங்களை உயர்த்திக் கொள்ள முடியும்?

உண்மைதான்! கணவன் தான் குடும்பத்தின் தலைவன் (அமீர்) என்பது உண்மையே!

“ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளியாவார். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார். பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்… ” (ஸஹீஹுல் புகாரி- 2558)

ஆனால் குடும்பத்தின் பொறுப்பு (guardianship) ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் ஆண்களே உயர்ந்தவர்கள் (gender superiority) என்றாகி விடுமா? ஒரு போதும் ஆகாது!

உயர்வையும் சிறப்பையும் அல்லாஹு த ஆலா ஆண்-பெண் பாலைப் பொறுத்து வழங்குவதே இல்லை!

இதனை சற்று ஆழமாக நாம் பார்த்திட வேண்டியுள்ளது. பின் வரும் இறை வசனங்களை சற்று நிதானமாகப் படித்து சிந்தியுங்கள்:

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்ஸஸஸ (4:34).

மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்; ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு; (4:32)

மேற்கண்ட இரண்டு இறை வசனங்களிலும் – “அல்லாஹ் சிலரை சிலரை விட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான்” என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. இந்த “மேன்மைப்படுத்துதல்” என்பது திருமறையில் வேறு சில இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது எதனைக் குறிக்கின்றது என்றால் –

அல்லாஹு தஆலா ஒரு சிலருக்கு வேறு சிலரை விட சிலவற்றை சற்று அதிகமாக “வெகுமதியாக” (gifts) வழங்கியிருக்கின்றான்.

இது எதற்காக என்றால் அல்லாஹு த ஆலா எவைகளை ஒருவருக்கு வெகுமதியாக வழங்கியிருக்கின்றானோ அவற்றை (திறமைகள், ஆற்றல்கள்) பயன்படுத்திட வேண்டிய முறையில் பயன்படுத்தி அல்லாஹு த ஆலாவின் திருப் பொருத்தத்தை அவர் “சம்பாதித்துக் கொள்ள வேண்டும்”! அவ்வளவு தான்!

இங்கே நாம் கவனித்திட வேண்டியது என்னவெனில்-

மனிதர்கள் என்ற அடிப்படையில் கணவனும் மனைவியும் ஒரே நேர்கோட்டில் தான் நிற்கிறார்கள்!

குடும்பத்தின் பொறுப்பாளர்கள் என்ற அடிப்படையிலும் கணவனும் மனைவியும் சம அந்தஸ்தில் தான் இருக்கின்றார்கள்!

இறைவனுக்கு முன்னால் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் எனும் அடிப்படையிலும் அவர்கள் சமமானவர்களே!

இறைப் பொறுத்தத்தைச் சம்பாதித்திடும் இலக்கில் முன்னேறிச் சென்றிட வேண்டும் எனும் ஊக்கத்திலும் அவர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அன்று!

அல்லாஹு தஆலா அவர்களுக்கு வழங்கியுள்ள தனிப்பட்ட ஆற்றல்களில் மட்டுமே அவர்களுக்குள் வேறுபாடு! இந்த வேறுபாடு ஒருவரை விட ஒருவர் தம்மை உயர்த்திக் கொள்வதற்காக நிச்சயமாக அன்று!

உயர்வும் கண்ணியமும் எதனைப் பொறுத்தது?

உங்களில் எவர் மிகவும் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். (49:13)

மனைவி ஒரு பொக்கிஷம் என்றார்கள் நபியவர்கள். அந்தப் பொக்கிஷம் உங்களுக்காகக் காத்திருக்கும். உங்களை வரவேற்கும். அதன் அளப்பரிய செல்வங்களை உங்கள் காலடியில் கொண்டு வந்து கொட்டும்.

வீணடித்து விடாதீர்கள் உங்கள் பொக்கிஷத்தை!

உங்கள் தாயும் உங்கள் சகோதரிகளும் அந்தப் பொக்கிஷத்தை நீங்கள் அடைவதிலிருந்து உங்களைத் தடுத்திட அனுமதிக்காதீர்கள்!

இல்லறம் இனிக்கட்டும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s