அல்லாஹ்வின் மகிழ்வும் ஆனந்தப் பெருவாழ்வும்

-         310 821enஅல்லாஹ்வின் மகிழ்வும் ஆனந்தப் பெருவாழ்வும்

நீதித் திருநாளின் நிலையான பெருந்தலைவன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ் ஜல்லஜலாலஹு அருள்கின்றான்:

”நிச்சயமாக, நல்லவர்கள் அந்நாளில் சுவர்க்கத்தின் பேரின்பத்தில் திளைத்து இருப்பார்கள். உயர்ந்த கட்டில்கள் மீது சாய்ந்த வண்ணம் சுவனபதியின் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.அவர்கள் முகங்களைக் கொண்டே அவர்களுடைய சுகவாசத்தின் செழிப்பை நபியே நீர் கண்டறிவீர்.முத்திரையிடப்பட்டிருக்கும் கலப்பற்ற மதுபானம் அவர்களுக்குப் புகட்டப்படும். அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். போட்டியிட்டு ஆசை கொள்ள விரும்புவோர் அதனையே ஆசை கொள்ளவும். அதில் “தஸ்னீம்” என்ற வடிகட்டிய பானமும் கலந்திருக்கும். அது ஓர் அற்புதமான நீரூற்று ஆகும். அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள் அதன் நீருடன் மதுவைவையும் அருந்துவார்கள்.” (அல்குர்ஆன் 83:22)

ஆள்பவனும் ஆற்றல் மிக்கவனுமாகிய அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா மேலும் சொல்கின்றான்:

தங்கத் தட்டுகளும் கோப்பைகளும் அவர்களுக்கிடையே சுற்றி வந்து கொண்டிருக்கும். மனம் விரும்பக் கூடிய, கண்களுக்கு இன்பம் அளிக்கக் கூடிய அனைத்துப் பொருட்களும் அங்கு இருக்கும்.அவர்களிடம், ‘இங்கே நீங்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பீர்கள். நீங்கள் உலகத்தில் செய்து கொண்டிருந்த நற்செயல்களின் காரணத்தால், இந்தச் சுவனத்திற்கு வாரிசாக நீங்கள் ஆக்கப்பட்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு இங்கே ஏராளமான கனிகள் உள்ளன. அவற்றை நீங்கள் மகிழ்வுடன் உண்பீர்களாக!’ என்று கூறப்படும். (அல்குர்ஆன் 43:68)

இறைவனின் சிரிப்பில் எளியவனின் ஈடேற்றம்:

அல்லாஹ் ஜல்லஜலாலஹுவால் ஆசீர்வதிக்கப்பட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சுவர்க்கவாசியின் நிலை குறித்து நவின்றார்கள்:

நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறி சுவர்க்கவாசிகளில் இறுதியாகச் சுவர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து கை கால்களால் தவழ்ந்தவராக வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர்! அவரிடம் அல்லாஹ் ஜல்லஜலாலஹு ‘நீ போய் சுவர்க்கத்தில் நுழைந்துகொள்!’ என்பான். அவர் சுவர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். உடனே அவர் திரும்பி வந்து, “என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்’ என்று கூறுவார். அதற்கு, அல்லாஹ் ஜல்லஜலாலஹு ‘இல்லை. ‘நீ சென்று சுவர்க்கத்தில் நுழைந்துகொள்!’ என்று மீண்டும் சொல்வான்.

அவர் சுவர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்றே மறுபடியும் அவருக்குத் தோன்றும்! ஆகவே, அவர் திரும்பி வந்து ‘என் இறைவா! அது நிரம்பியிருப்பதாகக் காண்கின்றேனே?’ என்று கூறுவார். அதற்கு வல்லமையும் மாண்பும் நிறைந்த கருணையாளன் ‘நீ சென்று சுவர்க்கத்தில் நுழைந்துகொள். ஏனெனில்,உலகம் மற்றும் அதைப் போன்ற பத்து மடங்கு இடம் சுவர்க்கத்தில் உனக்கு உண்டு!’ என்று சொல்வான்.

அதற்கு அம்மனிதர், ‘அரசருக்கெல்லாம் அரசன், பேரரசன் ஆகிய நீ என்னைக் கேலி செய்கிறாயா? அல்லது என்னைக் கண்டு சிரிக்கின்றாயா?’ என்று கேட்பார் என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்துக் கொண்டே கூறினார்கள்.

இதை எங்களுக்குக் கூறியபோது, ‘அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் கண்டேன்’.

‘இவரே சுவர்க்கவாசிகளில் தகுதியால் மிகவும் குறைந்த அந்தஸ்து உடையவர் ஆவார்’ என்று கூறப்பட்டு வந்தது. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6571)

உலகமெலாம் காக்கின்ற ஒப்பற்ற உயர் தலைவன் அல்லாஹ்வின் இத்தகைய எல்லை கடந்த கருணை குறித்து, கனிவுநிறைந்த கண்ணியத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹுனைன் யுத்தம் நிகழ்ந்த பொழுதில் இவ்வாறு கூறினார்கள்:

போரில் பிடிபட்டவர்களுள் ஒரு தாய்மை நிறைந்த பெண்மணியின் மார்பில் இருந்து தாய்ப்பால் ஒழுகிக் கொண்டிருந்தது. எனவே, கண்ணில் காணும் குழந்தைகளை எல்லாம் தூக்கித் தன் மார்போடு அணைத்து அவர்களுக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த பேரறிஞர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இந்தப் பெண், அந்தக் குழந்தைகளைத் தூக்கி நெருப்பில் போட்டுவிடுவாள்’ என்று நம்புகிறீர்களா? என்று தம் தோழர்களிடம் வினவினார்கள். அதற்கு ஒரு ஸஹாபி எழுந்து, ‘அவளுக்கு அத்தகைய ஒரு வாய்ப்பு கிடைத்தால்கூட ஒருக்காலும் அவள் அப்படி செய்யமாட்டாள் யா ரசூலல்லாஹ்’ என்று பதிலளித்தார்.

ஞானமிகு தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: அறிந்து கொள்ளுங்கள். இந்தப் பெண்ணின் அன்பைவிட, உங்களின் இறைவன் பன்மடங்கு தன் அடியார்கள் மீது இரக்கம் கொண்டவன். (அறிவிப்பாளர்: உமர் ஃபாரூக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5999)

இது போன்ற இன்னொரு சமயத்தில்தான், ‘அல்லாஹ்வின் தூதரே, நான் சுவர்க்கத்தில் நுழைவேனா?’ என்று கேட்டு நின்ற ஒரு மூதாட்டியின் சுவனம் பற்றிய கேள்விக்கு, ‘கிழவிகள் சுவனம் புகுவதில்லை!’ என்ற அதிர்ச்சியான ஒரு பதிலை அவருக்கு அளித்தார்கள் அண்ணலார்! அது கேட்டு மிகுந்த மனவருத்தத்தோடு போய்க் கொண்டிருந்த அவரைத் திரும்ப வரவழைத்து,

‘நீர் கிழவியாகச் சுவனம் புகமாட்டீர்! ஓர் எழில் மிக்க இளநங்கையாகவே சுவர்க்கத்தின் சிங்காரச் சோலைகளில், அதன் வண்ண மலர்க் கூட்டங்களில் மகிழ்ச்சியுடன் நுழைந்து செல்வீர்!’ என்று அவரை மனம் குளிரச் சிரிக்க வைத்தார்கள் வாய்மையின் அழைப்பாளர் வாஞ்சை நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

அத்துடன் அவருக்கு இந்த அருள்மறை கூறும் அழகிய வாக்கியங்களை ஓதிக் காட்டினார்கள்:

“நிச்சயமாக, சுவர்க்கத்தின் பெண்களாகிய அவர்களை புதிய ஓர் அமைப்பில் நாம் உருவாக்கியுள்ளோம். அவர்களை நாம் கன்னிகளாகவும் தன் கணவனையே காதலிப்பவர்களாகவும் மேலும், சமவயது உடையவர்களாகவும் நாம் ஆக்கி இருக்கின்றோம். (அல்குர்ஆன் 56:35)

பொன்மனச் செம்மல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பூத்துக் குலுங்கும் புன்சிரிப்பைப் பற்றிப் பாராட்டும்போது, “வாளேந்தி வன்சமர் புரிந்தெல்லாம் சாதிக்கமுடியாத சாதனைகளைக் கூடச் சீர்திருத்தவாதிகளில் எல்லாம் உயர்ந்தவராகிய நபிகள் நாயகத்தின் இனிய சொல்லும் புன்சிரிப்பும் சாதித்தது” என்ற வலிய உண்மையை ஓங்கி உரைத்தார் பகுத்தறிவுத் தமிழறிஞர் அண்ணாத்துரை.

“இங்கிலாந்து மட்டுமல்ல! இந்த ஐரோப்பா முழுவதையும் அடுத்த நூறு ஆண்டுகளில் ஏதாவது ஒரு மதம் ஆட்சி செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது என்றால், நிச்சயமாக அது இஸ்லாம்’தான்” என்பதை ஆராய்ந்து முடிவாக எழுதினார் ஆங்கிலேயச் சிந்தனைச் சிற்பி ஜார்ஜ் பெர்னார்ட்ஷா.

மனிதகுலத்தின் மாணிக்கமாகிய மாண்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஓதுவீராக’ என்ற விண்ணகத்திலிருந்த வந்த அந்த ‘அசரீரி’யை எப்போது கேட்டார்களோ, அப்போதிருந்தே தம் உயிர்காற்றின் ஒவ்வொரு சுவாசத்தையும் ஒப்பற்ற ஓரிறைக் கொள்கையாகவே வெளியிட்டார்கள்!

இந்த உம்மத்திலிருந்து வந்த தனியொரு மனிதனின் நேர்வழி என்பது, தமக்குக் கிட்டிய ஈடேற்றமாகவே உணர்ந்து அதைப் புளகாங்கிதம் கொண்டு வரவேற்று மகிழ்ந்தார்கள் நமக்கு இன்ப நிலை பெற்றுத் தந்த அன்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இந்த ஒரே நோக்கத்திற்காகவே, தன் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய சிறிய தந்தை மாவீரர் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹுவை, மறைந்திருந்து கொன்ற ‘வஹ்ஷி’யையும் கூட மன்னித்து ஏற்றுக் கொண்டார்கள் அருள் வடிவான அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

இதன் விளைவாக, ‘வீழ்ந்தவருக்குச் சுவர்க்கமும் வாழ்பவருக்கு வெற்றியும்’ அந்த உத்தமத் திருநபியால் உறுதியானது! அகிலத்தின் வரலாற்றில் இதற்கு ஈடான இன்னொரு காட்சியை நாம் காணவே முடியாது! மனித சமூகத்தின் மீட்சியின் மீது இந்த அளவிற்குக் கருணையும் கனிவையும் வெளிப்படுத்தி நின்ற உயர்ந்த இலக்கணத்திற்கு உரியவரான இந்த மாமனிதரின் கால் தூசிக்குக்கூட மனித குலத்தின் வரலாறு படைத்தோர் என்ற வரிசையில் நிற்கும் வேறெந்த மனிதரும் நெருங்கி நிற்க முடியாது! (அறிவிப்பாளர்: 152 அபுல்கலாம் ஆஸாத், நூல்: ரஸூலே அஹ்மத்)

ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு, இரண்டாவதாக வந்த ‘வஹீ’யில் ‘எழுந்து நிற்பீர்! எச்சரிப்பீர்!’ என்ற மேலோன் அல்லாஹ்வின் கட்டளையைக் கண்ட அந்தக் கணத்தில் எழுந்து நின்ற இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கைக் குரல் ‘பாலைகளிலும் சோலைகளிலும் பனிபடர்ந்த நாடுகளிலும், காடுகளிலும் மேடுகளிலும் அதையும் தாண்டி நிற்கும் தீவுகளிலும்’ தடையில்லாமல் தம் இலட்சிய வாழ்வின் இறுதி நேரம்வரை மக்களை நல்வழிப்படுத்திய வண்ணம் ஒலித்துக் கொண்டே இருந்தது! இறுதிவரை இவ்வுலகில் சாதிக்க வந்த ஆதிக்க நாயகராகவே வரலாற்றில் மிளிர்ந்து நின்றார்கள் மணிமொழி பேசும் மன்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்!

ஒப்பற்ற ஒரே இறைவனை மட்டுமே வணங்கி வழிபடும் அற்புதமான ஒரு சமுதாயத்தை உருவாக்கும் அரும் பணியில், தம் உன்னதமான அழைப்புப் பணியின் ஒரே இலக்கான ‘ஏகத்துவம்’ என்ற வெற்றிக் கனியை இருபத்தி மூன்று ஆண்டுகளில் தம் கண்களாலேயே கண்டு, தம் கைகளாலேயே பறித்து, அதைப் பொக்கிஷமான ஒரு பரிசாக நமக்கு அளித்துச் சென்றார்கள் நம் சமுதாயக் காவலர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். இந்த அரிய முயற்சியில் மூழ்கி நின்ற களப்பணிகளில் அண்ணல் அவர்கள் அடைந்த இன்னல்களை அவர்களே பின்வருமாறு கூறுகின்றார்கள்:

“அல்லாஹ்வுக்காக வேறு எவரும் பயமுறுத்தப்படாத அளவுக்கு நான் பயமுறுத்தப்பட்டேன்! அல்லாஹ்வுக்காக வேறு எவரும் துன்புறுத்தப்படாத அளவுக்கு நான் துன்புறுத்தப்பட்டேன்! இந்த உலகில் வேறு எந்த உயிர்ப்பிராணியும் தின்ன விரும்பாத, ‘பிலால்’ தனது அக்குளில் மறைத்து வைத்திருந்த உணவைக்கொண்டு முப்பது நாட்கள் தொடர்ச்சியாய்க் கழிந்திருக்கின்றன!” (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஷமாயில் திர்மிதீ 37)

இவ்வாறு தம் வாழ்வாதாரங்களை நமக்காகவே சுருக்கிக்கொண்டவராக, ஏழ்மையில் தூய்மையும் எளிமையில் இனிமையும் கண்டவராக, தியாகத் தலைவர் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு இடரும் அல்லாஹ்வின் இத்தூய மார்க்கத்தை வளரச் செய்ததே தவிர, ஒருபோதும் அதைத் தளரச் செய்யவேயில்லை!

வான்மறையை ஏந்தி வந்த வண்ண ஒளியாக, தேன் சுரக்கும் திருமறையாகவே வாழ்ந்து காட்டிய திருத்தூதராக, உள்ளங்களையே ஊடுருவிச் சென்று தம் தோழமையால் தொட்டு வந்தவராக, உண்மையின் உணர்வலைகளை உசுப்பி எழுப்பியவராக, அறிவின் செறிவையே அடையாளம் கண்டவராக, அரிய குணங்களின் நிறைகுடமாய் நிமிர்ந்து நின்றவராக, ஆழ்ந்த ஞானத்தின் வெளிப்பாடாக ஒளிவீசி வந்தவராக, இனிய பண்புகளின் முழுமையானவராக, தம் இறுதி மூச்சுவரை தமது உம்மத்துகளைப் பற்றியே அக்கறையில் ஆழ்ந்திருந்தவராக, கட்டுக் கோப்பான ஒரு மாபெரும் சமுதாயத்தையே உருவாக்கிய மகத்தான சரித்திரத்தின் தலை நாயகராக, இவ்வாறான வேறு எந்த மனிதரோடும் ஒப்பிட முடியாத ஒரு சத்திய சீலராக வாழ்ந்து காட்டிய, சாந்த நபியின் தனிப்பெரும் ஒப்பற்ற தியாகங்களைப் பற்றி எல்லாம்,

சற்றே ‘நம் வாழ்வின், இரவின் இருள்களிலும் தனிமையின் வெறுமைகளிலும் பயணங்களின் ஓட்டங்களிலும் காத்திருப்புகளின் கண நேரங்களிலும் வசதிகளின் உச்சங்களிலும் மன மகிழ்ச்சியின் கொண்டாட்டங்களிலும் கொஞ்சமாவது அல்லது ஒரு நாளின் சில மணித் துளியிலாவது நாம் சிந்தனைக்குக் கொண்டுவந்து, அவர்களின் ‘அழகிய முன்மாதிரி’யை ஆராய்ந்து பார்த்து இருக்கின்றோமா? அல்லது ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் பத்து முறையாவது அவர்கள் மீது அன்புடன் ‘ஸலவாத்’ சொல்லியாவது நன்றியுணர்வுடன் நடந்து கொள்கிறோமா என்பதையும் சற்றே உணர்ந்து நாள்தோறும் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டியது இன்றையச் சூழலிலும் இன்னும் இறுதிக் காலம் வரையிலும் அது ஒரு கட்டாயமும் நம் கடமையுமாகும்!

“நீங்கள் உண்மையாகவே உங்களைப் படைத்த அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை முழுமையாகப் பின்பற்றுங்கள். அப்படியானால்தான் அல்லாஹ் உங்களை நேசிப்பான்”. (அல்குர்ஆன் 3:31)

என்ற இறைக் கட்டளையை நமக்கு அறிவுறுத்துமாறு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் ஜல்லஜலாலஹு, ‘அகிலத்தின் அருட்கொடையாகிய’ தன் தூதரின் உயர்வைப் பிரகடனப் படுத்துகின்றான். அவ்வாறு அழகிய முன்மாதிரியாக, பின்பற்றக் கூடிய எடுத்துக்காட்டாக எண்ணற்ற சம்பவங்கள் இறைத் தூதரின் அபூர்வமான குணங்களுக்கும் அற்புதமான நன்னடத்தைகளுக்கும் அழகிய சாட்சியங்களாக சரித்திரத்தை அலங்கரிக்கின்றன.

உலகில் தோன்றிய அத்தனைத் தலைவர்களும் மதவாதிகளும் தங்களைப் பின்பற்றியவர்களை ‘தொண்டர்கள்’ என்றும் ‘சீடர்கள்’ என்றும் பெயரிட்டு அழைத்தபோது, மானமிகு தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே அவர்களுக்குச் சுயமரியாதையைச் சொல்லிக் கொடுத்து, சமத்துவம் வழங்கி சகோதர வாஞ்சையுடன் ‘தோழர்கள்’ என அழைத்தார்கள். ஆண்டான், அடிமை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் நம்மில் கிடையாது என்று ‘தோழமையுடன்’ முழங்கினார்கள். இன்றைய கம்யூனிஸ்டுகள் “தோழரே” என்ற, பேச்சுக்கு மட்டும் பிரயோகிக்கும் அந்த வார்த்தையை முதன்முதலில் அறிமுகப்படுத்தி தன்மான வாழ்வுக்கு இலக்கணம் வகுத்து, அதை நடைமுறையில் அமுலாக்கம் செய்தவர் இறைவனின் தூதாய் வந்த நம் இனிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘தாம்!

எனது சகோதரர் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு, எங்களின் தந்தை அலீய் இப்னு அபீதாலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நானிலம் போற்றிடும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தம் தோழர்களுடன் நடந்துகொள்ளும் முறை யாது? என்று வினவியபோது, அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்:

ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போதும் புன்சிரிப்போடும் நற்குணத்தோடும் எளிமையான சுபாவத்தோடும் இருப்பார்கள். கடுகடுத்தவர்களாகவோ இறுகிய மனம் படைத்தவர்களாகவோ அவர்கள் இருக்கவில்லை. கூச்சலிடுதல், கெட்ட செயல் புரிதல், அடுத்தவரிடம் குற்றம் கண்டுபிடித்தல், அடுத்தவர்களை வரம்புமீறிப் புகழ்தல், மனம் நோகும்படி கிண்டல் செய்தல், கஞ்சத்தனம் போன்ற எந்த வித இழிவான குணங்களும் அவர்களிடம் இருந்ததே இல்லை. அவர்களுக்கு விருப்பமில்லாத பேச்சுக்களை பிறர் பேசும்போது அவற்றைக் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். வேந்தர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை மற்றரொருவர் பெற விரும்பினால், அதை அவர் பெறுவதைவிட்டும் நிராசை அடைந்துவிட மாட்டார். அதைத் தருவதாக வாய்மை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீணான வாக்களிக்கவும் மாட்டார்கள். சண்டையிடுதல், பெருமையடித்தல், வீண் பேச்சுப் பேசுதல் இவற்றை விட்டும் தம்மைத் தடுத்துக் கொள்வார்கள். அதைப் போன்று இத்தீய குணங்களை விட்டுப் பிறரையும் நீங்கிக்கொள்ளச் செய்வார்கள். யாரையும் இழிவாகப் பேசமாட்டார்கள். பிறரைப் பற்றிப் புறம்பேச மாட்டார்கள். அடுத்தவர்களின் குறைகளைத் தேடித் திரியமாட்டார்கள். நன்மை தரும் விஷயங்களைத் தவிர வேறு எதையும் பேச மாட்டார்கள்!

பேரன்பாளர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசினால், அவர்களின் தோழர்கள் தங்கள் தலைகளில் பறவைகள் அமர்ந்திருக்கின்றன என்பது போன்று ஆடாமல் அசையாமல் அமைதியாய்க் கவனிப்பார்கள். சுவர்க்கத்தின் சொல்லழகர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒன்றைச் சொல்லி முடித்து அமைதியான பின்பே தங்களுக்குள் மெதுவாகப் பேசத் துவங்குவர்! சத்தியத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன் தோழர்கள் யாரும் சண்டையிட்டுக் கொள்ளமாட்டார்கள்!

மடமை நீக்கிய மாண்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னிலையில் யாரும் பேசத் தொடங்கினால், இனிய நபியவர்கள் இடையே குறுக்கிடாமல், அவர் முடிக்கும் வரை அங்கே அமைதி காப்பார்கள். முந்தியவர் பேசியதைத் தொடர்ந்து அடுத்தவர் பேசினாலும் அதையும் அமைதியுடன் கவனித்துக் கேட்பார்கள். உரையாடல்களுக்கிடையே தோழர்கள் சிரிப்பை வெளிப் படுத்தினால், நகைச்சுவையை ரசிக்கும் நம் நபிமணியும் சேர்ந்து சிரிப்பார்கள். அவர்கள் ஆச்சர்யப்பட்டால், அவர்களுடன் சேர்ந்து வேந்தர் நபியும் தம் வியப்பை வெளிப்படுத்துவார்கள்!

முற்றிலும் அந்நியர்கள் வந்து அவர்கள் சபையில் பேசும் கடுகடுப்பான வார்த்தைகளையும் இங்கிதமில்லாத கேள்விகளையும் பொறுத்துக் கொள்வார்கள். சமயங்களில் இத்தகைய இங்கிதமற்றவர்களைக்கூட நபித்தோழர்கள் கூட்டிவந்து விடுவார்கள். அப்போதும்கூடப் பெருமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்.

தேவை வேண்டி நிற்பவர்களைக் கண்டால், அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும்படிக் கூறுவார்கள். எவரும் தம்மை நன்றி தெரிவிக்கும் வகையில் அல்லாமல் அவர்களை அளவுக்கு மீறிப் புகழ்ந்து முகஸ்துதி செய்வதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். வரம்பு மீறி யாரும் பேசினால் அதைத் தடுப்பார்கள் அல்லது எழுந்துவிடுவார்கள்’ என்று ஒரு சித்திரம் வடித்ததைப் போல் நம் முத்திரைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி அண்ணலின் இதயக் கனியாகிய அன்புப் பேரன் அழகின் அரசன் ஹஸன் இப்னு அலீய் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உரைத்தார்கள். (அறிவிப்பாளர்: ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஷமாயில் திர்மிதீ 350)

அந்த அன்பும் மென்மையும் கனிவும் கண்ணியமும் ஊக்கமும் உத்வேகமும் பொறுமையும் நிலை குலையாத உறுதியும் வலிமையும் எளிமையும் அல்லாஹ்வின் அருள்மீது அளவு கடந்த நம்பிக்கையும் கொண்ட அபூர்வமான அந்த மாமனிதரைத் தவிர வேறு எந்த மனிதர் மீதும் அந்த மேகம் இதுவரைக்கும் இறங்கிவந்து நிழலிட்டதில்லை! இந்த பூமியும் அவர் ஒருவரைத் தவிர வேறு எவருக்கும் இதுவரைத் தன் வழிமீது விழிகளைத் திறந்து விரிப்பாக்கி வைக்கவுமில்லை! அத்தனை கோடி மனிதர்களில் இருந்தெல்லாம் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமனிதர்! கருணையின் திறவுகோல்! சுவனத்தின் வழிகாட்டி! சத்தியத்தின் சான்று! அல்லாஹ்வின் மகிழ்வு! நம் ஆனந்தப் பெருவாழ்வின் ஆதார சுருதி! தரணி எல்லாம் போற்றிடும் நம் தங்கத் தலைவர்! இந்த உடம்பிலே ஒட்டி இருக்கும் உயிரென்ன? இந்த உயிரைவிட உயர்வான வேறு ஏதாவது ஒன்று இருக்குமாயின் அதையும்விட நமக்கு மேலானவர்!

நிலவு போன்ற வண்ண முகமும், மென்மை தவழும் மென்னகைச் சிரிப்பும், அகலமான விரிந்த நெற்றியும், இரவின் இருளிலும் பிரகாசிக்கும் சௌந்தர்யமும், தலையின் மீது கறுப்புத் தலைப்பாகையும், காதுமடல் வரைத் தொங்கும் சுருட்டை முடியும், கண்களா அவை காந்தங்களா என வியக்க வைக்கும் ஈர்ப்பு விழிகளும், அன்பில் இழைத்த மென்மைக் கன்னங்களும், கருவில்லைப் போல் நீண்ட இமைகளும், புன்னகை வாசம் பொழுதெல்லாம் வீசும் இதழ்களும், நிலையாய் நிறைந்திருந்த அந்தக் கருணையின் வடிவமானவரை இப்போதே காணக் கண்கள் தேடுகின்றன!

அது சாத்தியமில்லை! எனினும், ‘அண்ணல் நபியின் அழகிய முன்மாதிரி’ நம் கண்முன்னே அற்புத வரலாறாக அவர்களின் ஒவ்வொரு அசைவுகளோடும் உயிரோடு நிற்கிறது! நபிமொழி ஒவ்வொன்றையும் நம் மனத்தினில் ஆழமாகப் பதித்துக் கொண்டு, அவற்றை நடைமுறைப்படுத்தி வாழத் துவங்கி விட்டால், அந்தப் பன்முகத் திறன் கொண்ட பண்பாளர் நடந்து காட்டிய வழித் தடங்களின் சுவடுகளை நோக்கி நாம் நடக்கத் துவங்கிவிட்டால், நிச்சயமாக, மறுமையில் அந்த மாண்பாளர் நபியின் தோழமையை மகிழ்ச்சியோடு நாம் பெறலாம்!

“நம்முடைய அடியார்களிலிருந்து நாம் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவர்களுக்கு, நாம் இவ்வேத நூலை உரிமைப் படுத்துகின்றோம்” (அல்குர்ஆன் 35:32)

என்ற தன் அன்பு நேசராகிய அண்ணலாருக்கு அளவு கடந்த அருளாளன் அல்லாஹ் ஜல்லஜலாலஹு மேற்காணும் அருள்மறை வசனத்தை அருளியபோது,

“இந்த அகிலத்தின் முத்துக்களாகிய மக்களே, நற்செய்தி பெறுங்கள்! நீங்கள்தாம் இந்த ஒட்டுமொத்த உலகத்தின் உன்னதப் பிரஜைகள்! முதன்முதலில் சுவர்க்கம் புகும் கூட்டத்தினர் நீங்களாகவே இருப்பீர்கள்! ‘ஓரிறைவன்’ என்ற தத்துவத்தில் உறுதியாய் நில்லுங்கள். திருக்குர்ஆனை உங்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய்க் கொள்ளுங்கள். என் வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் வழுவாது பின்பற்றுங்கள். இன்ஷா அல்லாஹ், சுலபமாகச் சுவர்க்கம் புகுவீர்கள்” என்றார்கள் அமைதி நயமெங்கும் அழகுபடப் பொங்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

மேலும் ‘எனக்குப் பிறகு நீங்கள் துன்பங்களையும் தொல்லைகளையும் அனுபவிக்க நேரலாம். உங்களைவிட உவப்பானவர்களாக மற்றவர்கள் கருதப்படலாம். எனினும், என்னைச் சுவர்க்கத்தின் நீரோடை அருகே சந்திக்கும்வரை பொறுமை காத்திடுங்கள்’ என்றார்கள்.

சுவர்க்கத்தின் நீரோடை (அல்கவ்ஸர்):

ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களுடன் இருந்தபோது, திடீரென உறங்கிவிட்டார்கள். சிறிது நேரத்திற்குப் பின் சிரித்தவர்களாக, தமது தலையை உயர்த்தினார்கள். அப்போது நாங்கள், “யா ரசூலல்லாஹ்! தாங்கள் சிரிப்பதன் காரணம் என்ன?” என்று கேட்டோம்.

அதற்கவர்கள், ‘சற்றுமுன் எனக்கு அத்தியாயம் ஒன்று அருளப்பட்டது’ என்று தொடர்ந்து எங்களுக்கு அதை ஓதிக் காட்டினார்கள்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ

(நபியே, நிச்சயமாக, உமக்கு ‘அல்கவ்ஸரை’ வழங்கியுள்ளோம். எனவே, உம்முடைய இறைவனைத் தொழுது பலிப் பிராணியும் அறுத்து ‘குர்பானி’ கொடுப்பீராக! நிச்சயமாக, உம்முடைய பகைவன்தான் சந்ததியற்றவன்!) (அல்குர்ஆன் 108:1)

பின்னர், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அல்கவ்ஸர்’ என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்’ என்று பதிலளித்தோம்.

‘அது சுவனத்தின் ஒரு நீரோடையாகும்! என் இறைவன் மறுமை நாளில் அதைத் தருவதாக எனக்கு வாக்களித்துள்ளான்! அதன் மகிழ்ச்சியினால்தான் நான் சிரித்தேன். அதில் அபரிமிதமான நன்மைகள் உள்ளன. அது ஒரு நீர்த் தடாகம்! மறுமை நாளில் எனது உம்மத்தினர் தண்ணீர் அருந்துவதற்காக, அதை நோக்கி வருவர். அதன் குவளைகள் விண்மீன்களின் எண்ணிக்கை போன்றவை!

அப்போது அவர்களில் ஓர் அடியார் நீர் அருந்த விடாமல் தடுக்கப்படுவார். உடனே நான், ‘யா அல்லாஹ்! அவர் என் உம்மத்துகளில் ஒருவரல்லவா?’ என்பேன். அதற்கு, அனைத்தும் அறிந்தவனாகிய அல்லாஹ் ஜல்லஜலாலஹு, ‘உமது சமுதாயம் உமக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கி விட்டதை எல்லாம் நீர் அறிய மாட்டீர்!’ என்று கூறுவான். (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபுதாவுத் 4747)

அடக்கி ஆளும் அரசாங்கத்தின் அதிபதியாகிய வல்லமை நிறைந்த அல்லாஹ் ஜல்லஜலாலஹுவின் வரவை எதிர் நோக்கி எல்லோரும் நிற்பது மட்டும் ஐந்நூறு ஆண்டுகள் போலான அந்த மகத்தான நீதித் திருநாளின் நெருக்கடியில்! பெரும்பெரும் நபிமார்களும் இறைநேசர்களும் தங்களின் முடிவு என்னவாகுமோ என்று தவித்துக்கொண்டும் அந்தப் பெரும் அமளி துமளிகளில் அங்குமிங்கும் தத்தளித்துத் தடுமாறியும் திரியும் சூழ்நிலையில்! ஒவ்வொருவரும் தத்தம் ஆன்மாக்களைப் பற்றியே பரிதவித்து நிற்கும் வேளையில்,

ஒரே ‘ஓர் ஒளிபொருந்திய மனிதர்’ மட்டும் ‘தம் சமுதாய மக்களை’ப் பற்றிய கழிவிரக்கத்துடன் கவலைப்பட்டுக் காத்து நிற்கும் காட்சியை, அந்த அறிவெனும் சுடர்த் தாரகையை, அமைதியின் தனி ஜோதியை அங்கே நாம் காணலாம்!

பிரம்மாண்டமான அத்தனை மனிதக் கூட்டங்களுக்கும் மத்தியில், தொழுகைக்கு முன்னர் ‘உலூ’ எனும் அங்க சுத்தி செய்துகொண்ட காரணத்தால், தனியாக ஒளி வீசும் முகங்களை வைத்தே தம் உம்மத்துகளில் ஒவ்வொரு முஸ்லிமையும் சேயைக் கண்ட தாயைப் போல அடையாளம் கண்டு அழைக்கும் பேரன்பின் பிறப்பிடமாய்ப் பிறந்து வந்த எங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கே நிற்பதைப் பார்க்கலாம்!

தாகத்தில் தவித்துத் தன் தலைவனை நோக்கி ஓடிவரும் தம் உம்மத்தின் ஒவ்வொரு முஃமினையும் ஒரு தாய் போல அழைத்து, தாகம் தணித்து, ஆறுதல் அளித்து, அவனுக்கு மன்னிப்பும் வழங்குமாறு மாண்பாளன் அல்லாஹ்விடம் மன்றாடிக் கேட்டு, நல்லவர்களின் நந்தவனத்திற்குப் பரிந்துரையும் செய்யும் பண்பாளர் எங்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், விண்மீன்களுக்கு இடையே ஒரு வெண்ணிலவைப் போல அங்கே சுடர்விட்டுத் தெரிவதை நாம் காணலாம்!

ஆம்! அது ஓர் உன்னதமான சந்திப்பு…பொங்கிப் பிரவாகம் எடுத்து வரும் தடாகத்தின் நீர்க்கரையில்..பாலை விட வெண்மையான பளிங்கு வண்ண நிறத்தில் ஓடிவரும்… தேனைவிட இனிமையான தெள்ளிய நீர்ச்சுவையில்… நட்சத்திரங்கள் போன்று மின்னும் தண்ணீர்க் குவளைகள் அருகில்… அந்த சலசலத்து ஓடும் அமுத நதிக்கரையில்… கஸ்தூரியைவிட நறுமணம் வீசிவரும் வசீகர வேளையில்…. அதே மாறாத இனிய மென் புன்னகையுடன் நமக்காகவே காத்திருக்கும் மகிமையும் மாட்சிமையும் நிறைந்த மங்காப் புகழ்பெற்ற நம் தங்கத் தலைவரின் பரந்து விரிந்து நிற்கும் நேசச் சிறகின் நிழலினில்ஸ அவர்களை அன்புடன் நேசிக்கும் நாம் அனைவரும் ஒன்று கூடுவோம்…. இன்ஷா அல்லாஹ்!

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ

பரிபூரணமான இந்த அழைப்பின் இரட்சகனாகிய அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்கு உரியவனே! எங்களின் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ‘வஸீலா’ என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு ‘புகழுக்குரிய இடத்தில்’ அவர்களை எழுப்புவாயாக!

(இந்தப் பிரார்த்தனையை எவர் ஓதுகின்றாரோ அவருக்கு, மறுமை நாளில் அந்த மனிதருள் புனிதர், மாமனிதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரை கிடைத்து விடுகின்றது). (அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 614)

-இக்பால் M. ஸாலிஹ்

ஓ கஃபாவே !!!

6543உனக்குத்தான் எத்தனை சிறப்பு. உலகின் அனைத்து முஸ்லிம்களும் தொழுகையின்போது உன்னை நோக்கியே தொழுகின்றனர். நிற இன பேதமின்றி ஏழை பணக்காரன் பேதமின்றி உன்னை நோக்கி வருகின்றனர்.

நீ வல்ல இறைவனால் அபய பூமி என்றும் அறிவிக்கப்பட்டாய்.அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் நீ இன்றளவும் அபயபூமியாகவே இருக்கிறாய். 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் நீ இருந்து வருகிறாய்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ”ஹஸ்வா” என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக நீ அமைந்திருக்கும் மக்காவை நோக்கி, ”நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)” என்று கூறினார்கள்.

-அப்துல்லாஹ் பின்அதீ (ரலி) (திர்மிதீ 3860).

மக்காவை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறிய இச்சொற்கள், உன் சிறப்பை உறுதிபடுத்துகின்றன.

மேலும் அபீஸீனிய மன்னனின் ஆட்சியில் ஏமன் நாட்டின் பிரதிநிதியாக செயல்பட்டு வந்த ஆப்ரஹா என்பவன் கி.பி. 571-ல் பிரமாண்டமான யானைப் படை ஒன்றைத் தயார் செய்து உன்னை இடிப்பதற்காக அனுப்பிவைத்தான், அதை அழிப்பதற்காக அபாபீல் என்ற பறவைகளின் சொண்டுகிளில் சூடேற்றப்பட்ட கற்களை கவ்விக்கொண்டு வரச் செய்து, அந்தப்படையை மெண்டு துப்பிய வைக்கோலைப்போல் அல்லாஹ் ஆக்கினான்.

இங்கு என்னால் ஒரு கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை. உனக்கு ஏன் இத்தனை சிறப்பு. படைத்த இறைவனே உன்னை நேரடியாக பாதுகாக்கவேண்டிய அவசியமென்ன ?

உண்மையை சொல்வதென்றால் நீ கற்களால் கட்டப்பட்ட ஒரு சாதாரண கட்டிடம். எந்த ஒரு பொறியாளருடைய உழைப்பும் சிந்தனையும் தேவைப்படாத ஒரு சதுர வடிவிலான கட்டிடம். இன்னும் உன்னைச்சுற்றி பலநூறு மாடிகள் கொண்ட அழகான கட்டிடங்கள் இருக்க உனக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு ?

உலக மக்கள் அனைவரும் உன்னை நோக்கி தொழுவதினாலா ? அனைத்து மக்களை நீ அரவணைத்துக்கொள்வதினாலா ? நீ அபயமளிக்கப்பட்ட பூமி என்பதினாலா ? நிச்சயம் இவை மட்டுமே உன் சிறப்புக்கு காரணமாக இருக்கவே முடியாது..

இந்த கேள்விக்கு விடைதேடி நான் பல்லாயிரம் ஆண்டுக்கு முந்தைய ஒரு வரலாற்று பயணம் மேற்கொள்கிறேன்.

இப்பொழுது நீ இருக்கும் அதே இடம் ஆனால் அது யாருமில்லா பாலைவனம். மனிதர்கள் வாழ தகுதியற்ற பாலைவனம். ஆதம் (அலை) அவர்கள் காலத்திலேயே நீ கட்டப்பட்டுவிட்டாய் என்றபோதினும் உனக்கு இப்பொழுது இருக்கும் சிறப்பு அப்பொழுது இல்லை. ஒருவர் தன் மனைவி மற்றும் பிறந்து சிறிது நாட்களேயான தன் குழந்தையுடன் நீ இருக்கும் இடத்தை நோக்கி வருகிறார். பல ஆண்டு குழந்தை பாக்கியமில்லாமல் இறைவனிடம் வேண்டி பெற்ற குழந்தை அது.

இறைவனிடத்தில் இருந்து செய்தி இல்லை கட்டளை. உன் மனைவியையும் குழந்தையையும் யாருமே வாழாத வாழமுடியாத இந்த பாலைவனத்தில் விட்டுச் செல். எந்த ஆண் மகனுக்கும் செய்ய இயலாத ஒரு செயல். ஆனால் வேறு வழியில்லை இறைவனின் கட்டளை ஆயிற்றே. அவர் அவ்வாறே செய்கிறார்.பின் இறைவனிடம் பின்வருமாறு துஆ செய்கிறார்.

எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததிகளை, மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்கச் செய்து விட்டேன். அது விவசாயமற்றதொரு பள்ளத்தாக்கு! எங்கள் இறைவனே! அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருப்பதற்காக (அங்கு வசிக்கச் செய்தேன்.) மனிதர்களில் ஒரு தொகையினரின் உள்ளங்கள் அவர்களை நோக்கும்படி நீ செய்வாயாக! (பற்பல) கனி வர்க்கங்களையும் நீ அவர்களுக்கு உணவாக அளித்து வருவாயாக! (அதற்கு) அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள்.

-அல்குர்ஆன் (14 : 37)

இறைவனின் கட்டளை என்பதால் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மனைவி ஹாஜிரா (அலை) இதை ஆட்சேபிக்காமல் ஏற்றுக்கொள்கிறார். யாருமே வாழமுடியாத இடமாக இருந்தால் என்ன, பாதுகாப்பளிப்பது இறைவன் அல்லவா. ஆனால் அவ்வளவு எளிது அல்லவே பாலைவனத்தில் வாழ்வது. தன் சிறு குழந்தைக்கு தண்ணீர் தாகம், அழ ஆரம்பித்துவிட்டது. பெற்ற தாய் துடியாய் துடிக்கிறார். இந்த பாலைவனத்தில் நான் தண்ணீருக்கு எங்கே செல்வேன். அதோ தென்படுகிறது தண்ணீர் ஓடுகிறார் அது காணல் நீர் என்பதை அறியாமல். ஸஃபா என்னும் குன்றிலிருந்து மர்வா என்னும் குன்றுவரை ஒருமுறை அல்ல இருமுறை அல்ல ஏழுமுறை.அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உதவி புரிந்தான்.

ஆம் அல்லாஹ்வின் உதவி ஹாஜிரா (அலை) அவர்களுக்கு கிடைத்தேவிட்டது. பாறைகள் நிறைந்த தண்ணீருக்கு வழியே இல்லாத பாலைவனத்தில் நீரூற்றை ஓடச் செய்தான் வல்ல இறைவன். ஜம்ஜம் என்னும் இந்த நீரூற்று மக்கள் குடியேறும் இடமாக சிறிது சிறிதாக மாற உதவி புரிந்தது.

ஆனால் சோதனை மட்டும் முடிந்தபாடில்லை. இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு மீண்டும் இறைவனிடமிருந்து சோதனை,தன் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை இறைவனுக்காக நரபலி கொடுக்குமாறு கட்டளை. அனைவரும் தயாராகிவிட்டார்கள். ஷைத்தான் எவ்வளவோ இதை தடுக்க முயற்ச்சி எடுத்தும் பயனில்லை. கல்லால் அடிவாங்கியது மட்டுமே மிச்சம்.

வானவரின் தூதர் ஜிப்ரையில் (அலை) அவர்களை அனுப்பி இப்ராஹீம் (அலை) மகனை பலியிடுவதை தடுத்தான் இறைவன். நீ கண்ட கனவை நிறைவேற்றி விட்டாய். எம்முடைய சோதனை அனைத்திலும் வெற்றி அடைந்து விட்டாய் என்று அல்லாஹ் கூறினான். இப்ராஹீம் (அலை) மகனுக்கு பதிலாக ஒரு ஆட்டை அல்லாஹ் பலியிட கட்டளையிட்டான்.

ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) முகங்குப்புறக் கிடத்தினார்.அச்சமயம் நாம் “இப்ராஹீமே!” என அழைத்து, உண்மையாகவே நீங்கள் உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர்கள் என்றும், நன்மை செய்பவருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்” என்றும் கூறி, “நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்” (என்றும் கூறினோம்).ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.

-(அல்குர்ஆன் 37:103,104,105,106,107)

மேலும் வல்ல இறைவன் இப்ராஹீம் (அலை) அவர்களை பாராட்டி மக்களின் இமாமாகவும் (தலைவராகவும்) ஆக்கினான்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் தன் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களுடன் சேர்ந்து கஃபாவாகிய உன் அடித்தளத்தை உயர்த்தி

“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”

“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”

“இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக”

என இறைவனிடம் துஆ மூலம் வேண்டினார்கள்.வேண்டுகோள் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டது.

(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.

(இன்னும் நினைவு கூறுங்கள்:) இப்ராஹீம்: “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார்; அதற்கு இறைவன் கூறினான்: “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் – அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.”

-(அல்குர்ஆன் 2:125,126)

இதை பின்வரும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வார்த்தை மேலும் உறுதி படுத்துகின்றன.

“நிச்சயமாக அல்லாஹ் மக்கா நகரை புனித பூமியாக்கியிருக்கிறான். மனிதர்கள் அதைப் புனிதமானதாக ஆக்கவில்லை. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் அங்கே இரத்தத்தை ஓட்டுவதும், இங்குள்ள மரங்களை வெட்டுவதும் ஹலால் இல்லை”

காலங்கள் உருண்டோடின உன்னை ஓர் இறை கொள்கைக்காக கட்டிய இப்ராஹீம் (அலை) அவர்கள் இருந்திருந்தால் துடித்து போயிருப்பார். ஆம் ஓர் இறை வழிபாட்டிற்காக கட்டப்பட்ட உன்னுள் பல சிலைகள் கடவுள் என்னும் பெயரால். கொடுமையிலும் கொடுமை யாதெனில் உன்னை வல்ல இறைவனுக்காக கட்டிய இப்ராஹீம் (அலை) அவர்களும் கடவுளின் சிலையாய் மற்ற சிலைகளுடன் நின்றுகொண்டிருந்தார்.

சத்தியத்தை எடுத்துச்சொல்ல ஓர் இறை கொள்கையை நிலைநாட்ட உனது மக்கமா நகரிலேயே உதித்தார் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். உண்மையை உறக்க சொன்னதற்காக ஊரைவிட்டே விரட்டப்பட்டார்.சோர்ந்துவிடவில்லை பெரும்படையுடன் நீ இருக்கும் மக்கா நகரை வெற்றியும் கண்டார். உன்னிடத்திலே இருந்த அனைத்து சிலைகளையும் அப்புறப்படுத்தினார்.நீ எதற்காக கட்டப்பட்டாயோ அதனை நிறைவேற்றினார்.

ஆனாலும் அதுவரை முஸ்லிம்கள் உன்னைவிடுத்து பைத்துல் முகத்தஸையே கிப்லாவாக முன்னோக்கி தொழுதுகொண்டிருந்தார்கள். ஆனால் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கோ உன்னை கிப்லாவின் திசையாக நோக்கி இறைவனை வணங்க ஆசை.முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆசையல்லவா, நிறைவேறாமல் இருக்குமா?

(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.

-(அல்குர்ஆன் 2:144)

ஆக இந்த மாபெரும் வரலாற்று பயணத்தின் மூலம் இப்ராஹீம் (அலை) அவர்களும் அவர்களின் குடும்பமும் செய்த தியாகம் மற்றும் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆசையுமே கஃபாவாகிய உன் சிறப்புக்கு காரணம் என்பதை அறிந்துகொண்டேன்.

“வரலாறு தெரியாத சமுதாயம் நிலைக்காது” என்று சொல்லுவார்கள். இவ்வுலகில நீ இருக்கும்வரை உன்னை நோக்கி மக்கள் வருவது நிற்கும்வரை இஸ்லாமிய வரலாறு அழியாது இஸ்லாமும் அழியாது என்பதை நிச்சயம் நான் அறிவேன்.

உன்னைப்போல சிறப்பு பெறவேண்டும் என எனக்குள்ளும் ஓர் ஆசை. ஆனால் என்னால் நிச்சயம் இப்ராஹீம் (அலை) மற்றும் அவர்கள் குடும்பத்தினர் செய்தது போலெல்லாம் இறைவனுக்காக தியாகம் செய்திடமுடியாது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்விற்காக அல்லாஹ்வை நேசித்தார்கள். நானோ சுவர்க்கம் வேண்டும் என்பதற்காகவும் நரகம் வேண்டாம் என்பதற்காகவும் அல்லாஹ்வை நேசிக்கின்றேன்.

ஆகையால் ஹாஜிரா (அலை) அவர்கள் தன்னந்தனியாக பாலைவனத்திலே ஓடியது போல அதே இடத்தில் குளிர்சாதன வசதியுடன் மக்களுடன் மக்களாக கையில் தண்ணீரையும் ஏந்திக்கொண்டு ஹாஜிரா (அலை) ஓடியது போல ஓடி நடிக்கிறேன். இறைவனுக்காக என் பிள்ளையை பழிகொடுக்க மாட்டேன் என தெரிந்தும். யா அல்லாஹ் நீ ஆட்டை குர்பானி கொடுக்க சொன்னாய். இல்லையெனில் நான் என் மகனை உனக்கு குர்பானி கொடுத்திருப்பேன் என்பதாக நடித்து ஆட்டை பழியிடுகிறேன்.மேலும் அதிகம் அதிகம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓதுகின்றேன்.

இப்படியெல்லாம் செய்தாலாவது வல்ல இறைவன் என் துஆவை ஏற்றுக்கொள்ள மாட்டானா என்றும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த பாவியாகிய நானும் சுவனம் செல்லவேண்டும் என ஆசை கொண்டுவிடமாட்டார்களா என்றும் கனா காண்கின்றேன்.

-முஹம்மது சிராஜுத்தீன்

இறைத்தூதரும் குழந்தைகளும்

7869

[ ”குழந்தைகளை நேசிப்போரும் குழந்தைகளுக்கு சேவை செய்வோரும் இறைவனின் அருளை பெறுகிறார்கள். நரகிலிருந்து விடுதலை அடைகிறார்கள்” என்று அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

ஒருமுறை ஒரு நபித்தோழர் ”நபியவர்களே! அந்தக்குழந்தைகள் முஸ்லிம் குழந்தைகள் அல்ல” என்றார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”யார் குழந்தைகளாக இருந்தாலென்ன குழந்தை குழந்தைதான். எல்லாக் குழந்தைகளும் நேசத்திற்குரியதாகும்” என்று கூறினார்கள்.]

குழந்தைகளுடனும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளார்கள். குழந்தைகளுடன் எப்படிப் பழக வேண்டும் என்பதற்கும் அவர் முன்னோடியாக இருந்துள்ளார்கள். கைக்குழந்தைகளை உலுக்குவதையோ மேலெறிந்து பிடிப்பதையோ பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பவில்லை. சற்று வளர்ந்த குழந்தைகளுடன்தான் அவ்வாறு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளையாடினார்கள். கைக்குழந்தைகளின் கழுத்து மென்மையானதால் மூளை பாதிப்படையவோ அல்லது மரண மேற்படவோ வாய்ப்புண்டு.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழந்தையின் அழுகைக்கு பதிலளித்துள்ளார்கள். ஒரு முறை நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டு அத்தொழுகையை அவசரமாக தொழுது முடித்தார்கள். நபித்தோழர்கள் காரணம் கேட்க, ”பின்னால் தொழுது கொண்டிருக்கும் தாயின் மனம் பதைபதைக்கும் அல்லவா?” என்றார்கள். உணவு தேவைப்படும் போதும் சௌகரியமாக இருக்க விரும்பும் போதும் சௌகரியமாக தொடுகை தேவைப்படும் போதும் குழந்தைகள் அழுகையின் மூலம் தெரிவிப்பார்கள் என்பதை நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிந்திருந்தார்கள்.

குழந்தைகளுக்கு தேவையான நாளாந்த காரியங்களை ஒழுங்காகச் செய்வதிலும் அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதிலும் தானும் ஈடுபட்டு ஏனைய தோழர்களையும் ஊக்குவித்தார்கள். குழந்தைகள் தன்னை நம்புவதற்கும் ஊக்குவித்தார்கள். அதற்காக தனது அன்பையும் அரவணைப்பையும் காட்டினார்கள். குழந்தைகளை அரவணைத்து உரையாடுவதிலும் நகைச்சுவையாக பேசுவதிலும் ஆர்வம் காட்டினார்கள். குழந்தை ஒரு பிரச்சினையை தீர்க்க முடியாமல் விரக்தியடையும் போது வித்தியாசமான அணுகுமுறையைப் பயன்படுத்தி தீர்த்துள்ளார்கள். பெருநாள் தினத்தில் ஒரு குழந்தை கவலையுற்றிருந்ததைக் கண்டு தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று வேண்டிய உபசரணைகளை செய்தார்கள்.

அதேபோல் குழந்தைகள் ஆபத்தான காரியம் ஒன்றைச் செய்யும் போது உடனடியாகச் அச்செய்கையிலிருந்து குழந்தையை விடுவித்து பின்னர் அதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறியுமுள்ளார்கள். வீதியில் கல்லெறிந்து விளையாடுவதை தடுத்த சம்பவத்தைக் கூறலாம். அதற்குப் பகரமாக சதுரங்க விளையாட்டை அனுமதித்ததை காண முடிகிறது.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வின் வாள், சுவனத்தின் தலைவர்கள், தாவூதின் புல்லாங்குழல் என்றும் குழந்தைகளின் திறமைகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அடிக்கடி கூறுவார்கள். குழந்தைகளுக்கென்று தனியாக நேரம் ஒதுக்கியும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பழகியுள்ளார். ஹஸன், ஹுஸைன், உஸாமா, அனஸ் போன்ற குழந்தைகள் பிறகாலத்தில் வளர்ந்து பெரியவர்களான பின்பும் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடன் கழித்த அந்த இனிமையான பொழுதுகளை நினைவு படுத்தி கூறியுள்ளார்கள்.

அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழந்தைகளுக்கு பரிசுகளையும் வழங்கியுள்ளார்கள். பரிசு வழங்குவது பாசத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்கள். தொடுகை, ஸ்பரிசம் என்பவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். தலையை தடவுதல், மடியில் வைத்திருத்தல், அணைத்து பிடித்தல், முத்தமிடல், வருடுதல், குழந்தைகளும் தானும் பெரிய துணியால் போர்த்திக் கொண்டு கதகதப்பாக இருத்தல் போன்ற உடலின் தொடுகையால் வரும் பல அன்பு மொழிகளை வெளிப்படத்தியுள்ளார்கள் இவற்றுக்கான சம்பவங்களை சற்று நோக்குவோம்.

ஒருநாள் காலித் பின் ஸயீத் என்பவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்க்க வந்தார். அருடைய பெண் குழந்தையும் அவருடன் வந்த்து. இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அக்குழந்தை நபிகளாரின் முதுகின் மேல்பக்கத்தில் முத்திரை போன்று தசை வளர்ந்திருப்பதை கண்டது. உடனே குழந்தை அதைத்தொட்டு விளையாட ஆரம்பித்த்து. புதிய பொருட்களைக் கண்டால் குழந்தைகளது பார்வை அவற்றில் செல்வது இயற்கையல்லவா?

இதைக் கண்டதும் காலித்துக்கு கோபம் வந்தது. நபிகளுடன் விளையாடுகிறாயா? என்று குழந்தையை தடுத்தார். ஆனால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ”குழந்தை விளையாடட்டும் அதைத் தடுக்க வேண்டாம்” என்றார்கள்.

நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்பொழுதும் குழந்தைகளை நேசித்து வந்தார். குழந்தைகளைக் கண்டால் ஸலாம் சொல்லுவார். வெளியூருக்குச் சென்று திரும்பி வநதால் தெருக்களில் வரும் குழந்தைகளைத் தமது ஒட்டகத்தின் மீது ஏற்றிக் கொள்வார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பழங்கள் அன்பளிப்பாக கிடைத்தால் அவற்றை முதலில் குழந்தைகளுக்கே கொடுப்பார். போரில் குழந்தைகள் கொல்லப்பட்டதாக கேள்விப்பட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் கவலைப்படுவார். ஒருமுறை ஒரு நபித்தோழர் ”நபியவர்களே! அந்தக்குழந்தைகள் முஸ்லிம் குழந்தைகள் அல்ல” என்றார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”யார் குழந்தைகளாக இருந்தாலென்ன குழந்தை குழந்தைதான். எல்லாக் குழந்தைகளும் நேசத்திற்குரியதாகும்” என்று கூறினார்கள்.

”குழந்தைகளை நேசிப்போரும் குழந்தைகளுக்கு சேவை செய்வோரும் இறைவனின் அருளை பெறுகிறார்கள். நரகிலிருந்து விடுதலை அடைகிறார்கள்” என்று அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

விளையாட்டாகவும் பொய் சொல்லாதே

”மகனே இங்கே வா உனக்கு ஒரு சாமான் தருகிறேன்” என்றாள் அந்தத்தாய். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கு வந்தார்கள்.

”உன் குழந்தைக்கு எந்தப் பொருளைக் கொடுக்க நினைத்தாய்?” என் கேட்டார்கள்.

”நாயகமே பேரீச்சம் பழம் கொடுக்கப்போகிறேன்” என்றாள் அந்த தாய்.

”நீ உன் குழந்தைக்கு எதுவும் கொடுக்கவில்லையானால் நீ பொய் சொன்னதாக இறைவனிடம் எழுதப்படும். விளையாட்டாக கூட பொய் சொல்லக்கூடாது” என்றார்கள் அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

மற்றொரு நாள் ஒரு நபித்தோழர் வந்து சுவனம் செல்வதற்கு நான் என்ன நற்செயல் செய்யவேண்டும் என்று கேட்டார். அதற்கு நபிகள் ‘உண்மை’ என்று பதிலளித்தார்கள். ஏனெனில் உண்மை பேசும் மனிதன் எப்போதும் நல்ல காரியத்தையே செயகிறான் அவனிடம் இறை விசுவாசம் ஒளி வீசுகின்றது. நல்ல விசுவாசமுள்ளவன் நிச்சயமாக சுவனத்தில் பிரவேசிக்கிறான் என்பதை அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அத்தோழருக்கு விளக்கினார்கள்.

நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழந்தையாக இருக்கும் போது ஹலீமா என்னும் கிராமத்துப் பெண் அவருக்குப் பால் கொடுத்து வளர்த்தார்கள். நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வளர்ந்து நபிப்பட்டம் பெற்றார்கள். பல ஆண்டுகள் சென்றன. முஸ்லிம்களுக்கும் எதிரிகளுக்கும் நடந்த போரில் ஹலீமாவின் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்களும் முஸ்லிம்களிடம் கைதிகளாக பிடிபட்டனர்.

ஒருநாள் ஒருபெண் புழுதி படிந்த ஆடையுடன் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நேராக வந்து ”முஹம்மத் என்ன காரியம் செய்து விட்டீர்? உம்முடைய சிற்றன்னையுள்ள கோத்திரத்தை கைதியாக்கி வீட்டீரே!” என்றாள். அங்கிருந்தவர்கள் அந்தப்பெண் திடீரென நுழைந்ததையும் துணிச்சலாகப் பேசியதையும் கண்டு வியப்படைந்தார்கள்.

ஆனால் அவ்வாறு வந்த பெண் தனது செவிலித்தாய் என்றறிந்த நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து அந்த அம்மையாரை அன்புடன் வரவேற்று தனது விரிப்பை விரித்து அதன் மீது உட்காரும்படி கூறினார். இனிமையாகப் பேசி, அநத அம்மையாரை மகிழ்வித்தார்கள். ஹலீமாவின் வேண்டுகோளுகிணங்கி எல்லாக் கைதிகளையும் விடுதலை செய்தார்.

நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனக்குப் பால் கொடுத்து வளர்த்த தாய்க்கு இவ்வாறுதான் நன்றி செலுத்தினார்கள். இவ்வாறு தனக்கு உதவி செய்த ஒவ்வொருவருக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி நன்றி செலுத்தியுள்ளார்கள். மற்றொரு நாள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் இருக்கும் போது அவரது செவிலித்தாய் ஹலீமாவின் கணவர் வந்தார் உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு தமது விரிப்பின் மூலையில் உட்காருவதற்கு இடமளித்தார்கள். சில நிமிடங்களில் செவிலித்தாய் ஹலீமா வநதார். உடனே விரிப்பின் இன்னொரு மூலையில் உட்காருவதற்கு இடமளித்தார்கள். இன்னும் சில வினாடிகளில் ஹலீமாவின் புதல்வி வந்தார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து நின்று அந்த விரிப்பில் மிகுதியாக இருந்த இடத்தில் தனது பால்குடிச் சகோதரியை உட்கார வைத்தார்கள்.

அன்று நோன்புப் பெருநாள். அதிகாலையிலிருந்தே பெருநாள் களைகட்டத் தொடங்கியிருந்தது பெருநாளைக் கொண்டாடுவதற்காக ஆயத்தங்களை எல்லோரும் சுறு சுறுப்புடன் செய்து கொண்டிருந்தார்கள். பெருநாள் தொழுகைக்கான நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. புத்தாடை அணிந்து பெரியவர்களும் குழந்தைகளும் தொழுகைக்காக மைதானத்தை நோக்கி நடக்கலானார்கள். சற்று நேரத்தில் தொழுகை முடிந்த்தும் குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிவிளையாடிக் கொண்டிருந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பார்வை அஙகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் பக்கமாக சென்றது. அவன் மெலிந்திருந்தான். அழுக்கடைந்த ஆடையை அணிந்திருந்தான். மைதானத்தில் ஒரு மூலையையில் அமர்ந்து மௌனமாக அழுது கொண்டிருந்தான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அச்சிறுவனை நோக்கி நடந்தார்கள் அவனுடைய தோளில் கைவைத்து அவனது தலையைத் தன்பக்கம் திருப்பினார். மகனே ஏன் அழுகிறாய் என்று அன்பாக கேட்டார். அந்தக் குழந்தை கோபத்துடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கையைத் தட்டி விட்டது. என்னைத் தனியாக விட்டுவிடுங்கள் நான் பிரார்த்தனை செய்கின்றேன் என்றான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய தலையைத் தடவிக் கொண்டு ”மகனே என்ன நடந்த்து?” என்று கேட்டார்கள். அவன் தனது முழங்கால்களுக்கிடையில் முகத்தைப்புதைத்துக் கொண்டு முஹம்மது நபிக்கு எதிராக நடந்த போரில் எனது தநதை மரணித்து விட்டார். என்னுடைய தாயார் வேறு ஒருவரை திருமனம் செய்து கொண்டார். என்னுடைய உடைகளையும் அபகரித்துக் கொண்டார். நான் தாயாரிடம் போனேன். அவருடைய புதிய கணவர் என்னைத் துரத்திவிட்டார். நான் என்ன செய்வேன் என்று ஓவென்று அழ ஆரம்பித்தான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அழுகை வந்தது. அதை அடக்கிக் கொண்டு ”அதுக்கென்ன நானும் ஓர் அநாதைதான் பிறப்பதற்கு முன்பே வாப்பாவை இழந்து விட்டேன்” என்று கூறினார்கள். சிறுவன் நபிகளை நிமிர்ந்து பார்த்த்தான். அவனுக்கு யார் என்பது நினைவுக்கு வந்தது. அவனுக்கு வெட்கம் வந்துவிட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”நான் உனக்கு தந்தை, ஆயிஷா உன் தாய், ஃபாத்திமா உன் சகோதரி என்று இருந்தால் சந்தோசப்படுவாயா?” என்று கேட்டார்.

சிறுவன் ஆம் என்றான். அச்சிறுவனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அழைத்து ”இதோ உனக்கு ஒரு மகன்” என்றார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அச்சிறுவனை அழைத்துச் சென்று குளிப்பாட்டினார். பின்னர் அவனுக்கு ஆடை அணிவித்தார்கள். அவனுக்கு உண்ண உணவு கொடுத்தார்கள். இப்போது வெளியே சென்று குழந்தைகளுடன் விளையாடிவிட்டு வா என்றார்கள். அவன் ஆனந்தத்துடன் வெளியேறி மைதானத்தை நோக்கி ஓடினான். எல்லா மனிதர்களுக்கும் முன்மாதிரியாக ஏக இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட அகிலத்தின் அருட்கொடை நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியைப்பின்பற்றி நாமும் எல்லா குழந்தைகளிடம் அன்பு பாராட்டுவோம்.

source: http://idrees.lk/