அல்குர்ஆன் கூறும் இன்பத்திலும், துன்பத்திலும் மனிதன்!

22222223அல்குர்ஆன் கூறும் இன்பத்திலும், துன்பத்திலும் மனிதன்!

மனிதன் நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சிலசமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கிறான். (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:11)

   அபூபக்கர், அதிரை   

(நபியே!) நீர் கூறும், நீங்கள் கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித் தவிக்கும் சமயத்தில்) எங்களை இதை விட்டுக் காப்பாற்றி விட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகிவிடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகின்றவன் யார்? (அல்குர்ஆன் 6:63)

இதிலிருந்தும் இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்வே, பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 6:64)

(நபியே!) நீர் கூறும், உங்கள்(தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படிச் செய்யவும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான். அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக(நம்) வசனங்களை எவ்வாறு விவரிக்கின்றோம் என்பதை நீர் கவனிப்பீராக. (அல்குர்ஆன் 6:65)

மனிதனை(ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக் கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கிறான். அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன.(அல்குர்ஆன் 10:12)

அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்ய வைக்கிறான். (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது சாதகமான நல்ல காற்றினால் அவர்களைக் கப்பல்கள் (சுமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சி யடைகிறார்கள், பின்னர் புயல் காற்று வீசி எல்லாப் பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும்போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே) என்று எண்ணுகிறார்கள், அச்சமயத்தில் தூயஉள்ளத்துடன், நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றிவிட்டால் மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம் என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள். (அல்குர்ஆன் 10:22)

நாம் நம்மிடமிருந்து நற்கிருபையை மனிதன் சுவைக்கும்படிச் செய்து, பின்பு அதனை அவனை விட்டும் நாம் நீக்கிவிட்டால், நிச்சயமாக அவன் நிராசைப்பட்டு பெரும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான்.(அல்குர்ஆன் 11:9)

அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின், நாம் அருட்கொடைகளை அவன் அனுபவிக்கும்படிச் செய்தால், என்னை விட்டுக் கேடுகள் எல்லாம் போய்விட்டன என்று நிச்சயமாகக் கூறுவான். நிச்சயமாக அவன் பெருமகிழ்ச்சியும், பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 11:10)

மேலும், எந்த நிஃமத்(பாக்கியம்) உங்களிடம் இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதேயாகும். பின்னர் ஏதாவது ஒரு துன்பம் உங்களைத் தொட்டுவிட்டால் அவனிடமே நீங்கள் முறையிடுகிறீர்கள். பின்னர் அவன் உங்களிடமிருந்து அத்துன்பத்தை நீக்கி விட்டால், உடனே உங்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கே இணை வைக்கின்றனர். (அல்குர்ஆன் 16:53,54)

மனிதன் நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சிலசமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கிறான். (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:11)

இன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம் தீண்டினால் அவனையன்றி நீங்கள் எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவை யாவும் மறைந்துவிடும். எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும்பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள். இன்னும் மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:67)

(கரை சேர்ந்த)பின் அவன் உங்களைப் பூமியின் ஒரு புறத்தில் புதையும்படி செய்துவிட மாட்டான் என்றோ அல்லது உங்கள் மீது கல் மாரியை அனுப்பமாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து இருக்கிறீர்களா? பின்னர் நீங்கள் உங்களைப் பாதுகாப்போர் எவரையும் காணமாட்டீர்கள். (அல்குர்ஆன் 17:68)

அல்லது, அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில் உங்களை மீளச் செய்து (எல்லாவற்றை யும்) முறித்துத் தள்ளும் புயல் காற்றை உங்கள் மீது அனுப்பி, நீங்கள் நிராகரித்ததற்காக உங்களை மூழ்கடித்து விடமாட்டான் என்றும் நீங்கள் அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா? அப்படி நேர்ந்தால் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் என நம்மைத் தொடர்ந்து உங்களுக்காகக் (கேட்போர்) எவரையும் காணமாட்டீர். (அல்குர்ஆன் 17:69)

இன்னும், மனிதர்களில் (ஓர் உறுதியும் இல் லாமல்) ஓரத்தில் நின்றுகொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான். அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான், ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான், இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான். இதுதான் தெளிவான நஷ்டமாகும். (அல்குர்ஆன் 22:11)

அவன் அல்லாஹ்வையன்றி, தனக்குத் தீங்கிழைக்க முடியாததையும், இன்னும் தனக்கு நன்மையும் செய்யாததையுமே பிரார்த்திக்கிறான். இதுதான் நெடிய வழிகேடாகும். (அல்குர்ஆன் 22:12)

(கப்பலில் செல்லும்) அவர்களை, மலை முகடுகளைப் போன்ற அலை சூழ்ந்து கொள்ளுமானால் அல்லாஹ்வுக்கு வழிபட்டு அந்தரங்க சுத்தியுடன் அவனிடம் பிரார்த்திக்கின்றனர், ஆனால் அவன் அவர்களைக் காப்பாற்றிக் கரைசேர்த்துவிட்டால் அவர்களில் சிலர் நடுநிலையாக நடந்து கொள்கிறார்கள். எனினும் மிகவும் நன்றிகெட்ட, பெருந்துரோகிகளைத் தவிர வேறு எவரும் நம் அத்தாட்சிகளை நிராகரிப்பதில்லை. (அல்குர்ஆன் 31:32)

மேலும் மனிதர்களில் சிலர் நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று சொல்கிறார்கள். எனினும் அவர்களுக்கு அல்லாஹ்வின் பாதையில் துன்பம் உண்டானால், மனிதர்களால் ஏற்படும் அந்த இம்சையை அல்லாஹ்வின் வேதனைப்போல் கருதி (உம்மை விட்டும் நீங்க முனைந்து) விடுகிறார்கள், ஆனால் உம் இறைவனிடத்திலிருந்து உதவி வரும்போது, நிச்சயமாக நாங்கள் உங்களுடனேதான் இருந்தோம் என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அகிலத்தாரின் இதயங்களில் இருப்பவற்றை நன்கறிந்தவனாக இல்லையா? (அல்குர்ஆன் 29:10)

மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கிறார்களே, பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து ரஹ்மத்தை சுவைக்க செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இணை வைக்கின்றனர்.(அல்குர்ஆன் 30:33)

இன்னும் நாம் மனிதர்களை(நம்) ரஹ்மத்தை ருசிக்க (அனுபவிக்க)ச் செய்தால், அவர்கள் அதைக்கொண்டு மகிழ்கிறார்கள், ஆனால் அவர்களுடைய கைகள் முன்னரே செய்துள்ளதைக் கொண்டு ஒரு தீங்கு அவர்களுக்கு சம்பவித்து விட்டால் அவர்கள் நிராசைப்பட்டு விடுகிறார்கள். (அல்குர்ஆன் 30:36)

இன்னும், மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழைக்கின்றான், பின்னர் (இறைவன்) தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு அளித்தானால், முன்னர் அவன் எதற்காக அவனை அழைத்துக் கொண்டிருந்தானோ அதை மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தி (மற்றவர்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுக்கிறான். (நபியே!) நீர் கூறுவீராக! உன் குஃப்ரைக் கொண்டு சிறிது காலம் சுகமனுபவி; நிச்சயமாக நீ நரகவாதிகளில் நின்று முள்ளவனே. (அல்குர்ஆன் 39:8) Continue reading