அம்மா… நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.

Mother-and-Baby

அம்மா…

நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.

என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.

கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.

என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போலவும் என்னுடன் பேசுவது போலவும் உணர்கிறேன்.

அந்தத் தொடுதலும் பேச்சும் மிக மென்மையாக இதமாக இருக்கிறது.

அதற்கு பதில் பேசும் விதமாக நிறைய முறை கைகால்களைஅசைத்திருக்கிறேன்.

கூடவே அவ்வப்பொழுது இன்னொரு குரலும் கேட்கும். ஆனால் அது கொஞ்சம் கரடு முரடாக இருக்கிறது.

எத்தனை விதமான சப்தங்கள் கேட்டாலும் எப்போதும் மாறாதிருப்பது அந்த இதயத்துடிப்பின் சப்தம் தான்.

அதுயாரிடம் இருந்து வருகிறது என்பதை நிச்சயம் ஒருநாள் பார்த்து விட வேண்டும்.

என்னவோ தெரியவில்லை… இரண்டு மூன்று நாட்களாக இங்கிருந்து வெளியே சென்று விட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. கை கால்களை உதைத்து எவ்வளவோ முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.

இறுதியாக ஒரு நாள் நான் இருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக இடம்மாறி எங்கோ நகரத் தொடங்கியது.

நான் தலை கீழாக மாறிவிட்டேன்.

அந்த இதயத்துடிப்பின் சத்தம் மெல்ல மெல்லக் குறைகிறது.
இந்த உலகத்தை விட்டு வேறெங்கோ செல்கிறேனோ என்று பயமாக இருக்கிறது.

எனக்கு மென்மையாகக் கேட்ட அந்தக் குரல் இப்போது வலியில் கதறுகிறது.

ஏனோ எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எல்லாம் என்னால் வந்தது. நான் தான் கை கால்களை உதைத்து ஏதோ செய்துவிட்டேன்.

திடீரென நான் இருந்த தண்ணீர் தொட்டியில் ஓட்டை விழுந்து விட்டது.

சோதனைக்கு மேல் சோதனை. தண்ணீரோடு அடித்துக்கொண்டு எங்கோசெல்கிறேன்.

இடையில் எங்கோ சிக்கிக்கொள்கிறேன்.
யாரோ என் தலையைப் பிடித்து இழுக்கிறார்கள்.

அதே நேரத்தில் அந்தக் குரலும் உயிர் போவதுபோல் கதறுகிறது. எனக்கும் வலிக்கிறது.

ஒரு வழியாக வெளியே வந்து விட்டேன். எனக்கும் அந்த உலகத்துக்கும் இருந்த கடைசித் தொடர்பான அந்தக் கயிறையும் வெட்டி விட்டார்கள்.

இவ்வளவு நாளும் நான் கேட்டு வந்த இதயத்துடிப்பும் முற்றிலும் நின்றுவிட்டது.

கதறிய அந்த குரலும் கேட்கவில்லை. அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

முதன் முறையாக வாய்விட்டு அழுகிறேன்.

ஆனால் என்னைச் சுற்றி எல்லோரும் சிரிக்கிறார்கள்.

அப்போதே தெரிந்து விட்டது இது ஒரு மானங்கெட்ட உலகம் என்று.

தண்ணீரில் குளிக்க வைக்கிறார்கள். ஆனாலும் அழுகிறேன். ஏதோ துணியில் சுற்றி எல்லோருக்கும் என்னைக் காட்டுகிறார்கள்.

என் இடுப்புக்கு கீழ் எதையோ பார்த்துச் சிரிக்கிறார்கள். எனக்குக் கோபமாய் வருகிறது. ஆனாலும் அழுகிறேன். அவர்கள் மட்டும் என்னைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து ஈ… என்று இளிக்கிறார்கள்.

அந்த இதயத்துடிப்பும் மென்மையான பேச்சும் எனக்குக் கேட்கவில்லை.
அதனால் இந்த உலகம் எனக்கு பிடிக்கவில்லை.

என்னைக் கொண்டு சென்று யார் பக்கத்திலோ படுக்க வைத்தார்கள்.

நான் அழுவதை நிறுத்தி விட்டேன். காரணம் அந்த இதயத்துடிப்பு இப்போது கேட்க ஆரம்பித்துவிட்டது.

கைகளால் என்னைத் தடவினார்கள். ஆம் என் உலகத்தில் இருந்தபோது உணர்ந்த அதே தொடுதல்.

அவர் மாதிரியே இருக்கான் இல்ல… என்று பேசிய போது அந்த குரலின் அதே மென்மையை உணர்ந்தேன்.

அது யாரென்று பார்த்து விடவேண்டும் என்று துடிக்கிறேன். ஆனால் கை கால்களை மட்டுமே அசைக்க முடிகிறது. திரும்ப முடியவில்லை.

எப்படியாவது பார்க்க வேண்டும் என்று நினைக்கும் போது இரண்டு கைகள்
என்னைத் தூக்குகிறது.

தன் முகத்துக்கு நேராய்க் கொண்டு போய் வைக்கிறது,.

மரணம் வரை சென்று வந்த துயரத்திற்கு நடுவே மகிழ்ச்சி நிறைந்த புன்னகை அந்த முகத்தில்.

அந்த முகத்தைப் பார்த்த போது எனக்குள் ஏற்பட்ட சந்தோஷத்தை, பரவசத்தை விவரிக்க எந்த மொழியிலும் வார்த்தைகளில்லை.

அது என் தாய் என்பதை உணர்ந்து கொண்டேன்.

ஆனாலும் ஏனோ அழுது கொண்டே இருக்கிறேன்.

நான் அழுத போதும் அம்மா மட்டும் சிரித்துக் கொண்டே இருக்கிறாள்.

எனக்குக் கோபமாய் வந்தது. அப்போது எனக்குத் தெரிய வில்லை…

என் மொத்த வாழ் நாளில் நான் அழுவதைப் பார்த்து என் அம்மா சிரிக்கும் ஒரே ஒரு நாள் அது தான் என்று.

பின் குறிப்பு:
படித்ததில் மிக பிடித்தது…
இருப்பினும் இதை எழுதியவர் யாரென்று தெரிய வில்லை…
அவர் எங்கிருந்தாலும் யாராக இருந்தாலும் வாழ்க வளமுடன்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s